×

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புரோக்கர்கள் அடாவடி: நடவடிக்கை எடுக்க கோரி பயணிகள் வலியுறுத்தல்

கூடுவாஞ்சேரி: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு புரோக்கர்கள் அட்டகாசம் செய்வதாகவும், இதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும், இதுகுறித்து உயர் அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் வலியுறுத்துகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் உள்ளது.

இங்கிருந்து திருச்சி, சேலம், மதுரை, ஈரோடு, மயிலாடுதுறை, நாமக்கல், திண்டுக்கல், கன்னியாகுமாரி, விழுப்புரம், திண்டிவனம், திருவண்ணாமலை, செஞ்சி, மேல்மலையனூர் உள்ளிட்ட பல்வேறு தென் மாவட்டங்களுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள், அரசு விரைவு பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் தினந்தோறும் இயங்கப்படுகிறது. தற்போது, கோடைகாலம் முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில், பேருந்து நடைமேடை எண் 10, 11, 12 ஆகியவற்றில் 10க்கும் மேற்பட்ட புரோக்கர்கள் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு பயணிகளை வழிமறித்து அச்சுறுத்தும் வகையில் அரசு விரைவு பேருந்துகளில் வந்து ஏறும்படி கூவிக் கூவி கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்கின்றனர். வர மறுத்தாலும் விடுவதில்லை. ரோந்து போலீசாரை கண்டதும் தனியாக போய் நின்று விடுகின்றனர்.

போலீசார் சென்றதும் மீண்டும் இதுபோன்ற அட்டகாசத்தில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை புகார் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, என பேருந்து பயணிகள் குமுறுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றும் பேருந்து பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

* 4 மாதத்திலேயே இயங்காத சார்ஜர் பாய்ண்ட்
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்து பயணிகளின் வசதிக்காக இரண்டு இடங்களில் சார்ஜர் பாயிண்ட் வைக்கப்பட்டது. ஆனால், பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 4 மாதங்களான சார்ஜர் பாயிண்ட்கள் இயங்கவில்லை. இதில், அந்த சார்ஜர் பாயிண்ட் ஓரங்கட்டப்பட்டுள்ளது. இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்து பயணிகள் அவசரத்திற்காக சார்ஜர் போட முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

* நாய்கள் தொல்லை… அலறும் பயணிகள்…
ஜிஎஸ்டி சாலை வழியாகவும், ஐயஞ்சேரி, மதுரை மீனாட்சிபுரம் வழியாகவும் 10க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் அத்துமீறி பேருந்து நிலையத்துக்குள் நுழைகிறது. இதனை பாதுகாப்பு பணியில் இருக்கும் செக்யூரிட்டிகள் கண்டுகொள்வதில்லை. இதில், தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்து பயணிகள் பேருந்து நிலையத்திற்குள் உள்ளே வரும்போது பேருந்து பயணிகளை பின் தொடர்ந்து தெரு நாய்கள் ஓடி வருகின்றன. இதில், பேருந்து நிலையத்திற்குள் காற்றோட்டமாக அமர்ந்து பேருந்து பயணிகள் சாப்பிடுகின்றனர். அப்போது, மோப்பம் பிடித்தபடி தெரு நாய்கள் பயணிகளைச் சுற்றி வலம் வருகின்றன. இதனால், பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடிக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

The post கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புரோக்கர்கள் அடாவடி: நடவடிக்கை எடுக்க கோரி பயணிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Clambakkam ,Kuduvanchery ,Klambakum bus station ,Dinakaran ,
× RELATED கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்...